ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்தை அடுத்த உசாரி கிராமத்தைச் சேர்ந்தவர் முகம்மது அர்ஜூ (21). இவர் தனது கிராமத்தில் பசு மாடுகளை கொல்லப்படுவதை தொடர்ந்து தடுத்து வந்ததாக அறிய முடிகிறது. இதனால், முகம்மது அர்ஜூ மீது அவரது சொந்த சமூகத்தினரே அதிருப்தியில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றி (அக்.19) நள்ளிரவில் தனியாக இருந்த முகம்மது அர்ஜூவை, முன்னு குரெஷீ, கைல் குரெஷீ ஆகிய இருவரும் இணைந்து கத்தியால் அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர். பின்னர், ஏதும் அறியாதது போல தங்களது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதனிடையே, இன்று (அக்.20) காலை காட்டுப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில், அர்ஜூவின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கிராமத்தினர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முகம்மது அர்ஜூவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வு பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் அந்த கிராமத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், முன்னு குரெஷீ, கைல் குரெஷீ ஆகிய இருவர் மட்டும் சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்துகொண்டதை அறிந்த விசாரணை அலுவலர்கள், இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த பயங்கரமான கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த படுகொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜார்க்கண்ட் மாநில குடிநீர் வாரிய அமைச்சர் மிதிலேஷ் தாக்கூர், முகம்மது அர்ஜூவின் வீட்டிற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறி, குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென உறுதியளித்தார்.