நாட்டில் மத வெறுப்புக்கான சூழல் நிலவிவரும் நிலையில், மத நல்லிணக்கத்தை முன்னிறுத்தும் வகையிலான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. கார்நாடக மாநிலத்தில் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முக்கிய சமூக சீர்திருத்தவாதியான பசவண்ணர் லிங்காயத்து சமூகத்தை நிறுவினார்.
சைவ சமயத்தைச் சார்ந்தவரான இவர்கள் சாதி மதங்களைக் கடந்து, சமய நல்லிணக்கத்தைப் பேணிவருபவர்களான லிங்காயத்துகளின் மடம் கர்நாடக மாநிலத்தின் பலப்பகுதிகளில் உள்ளது.
அங்குள்ள கதக் பகுதியில் உள்ள லிங்காயத் மடத்தின் மடாதிபதியாக இஸ்லாமியர் ஒருவர் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். 32 வயதான தீவான் ஷரீப் முல்லா, இளம் வயதிலேயே பசவண்ணரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரின் கொள்கைகளைப் பின்பற்றிவருகிறார்.
தொடர்ச்சியாக சமூகப் பணிகளை மேற்கொள்ளும் இவர், அங்குள்ள லிங்காயத் மடத்திற்கு பல்வேறு சேவைகளை ஆற்றியுள்ளார். கதக் பகுதி மக்களும் மடத்தினரும், இவரின் பண்பை போற்றி சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் விதமாக தற்போது அவரை மடாதிபதியாகத் தேர்வு செய்துள்ளனர்.
இது, தனக்கு கிடைத்த நல்வாய்ப்பு எனத் தெரிவித்த முல்லா, பசவண்ணரின் கொள்கைகள் உலகத்தின் அனைவருக்கும் பொதுவானது, அதை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்கப் பாடுபடுவேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஐ.நா. தீர்மானத்தில் இருந்து இலங்கை விலக முடிவு