புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று (நவம்பர் 22) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "புதுச்சேரியில் கரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. 97 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர்.
தீபாவளி முடிந்து பத்து அல்லது பதினைந்து நாள்களில் டெல்லி, மகாராஷ்டிரா, அஸ்ஸாம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கரோனா இரண்டாம் கட்டத்தை அடைந்துள்ளது. இதனால் புதுச்சேரி மக்கள் விழிப்பாகவும் தனிமனித இடைவெளியை கடைபிடித்தும் இருக்க வேண்டும். கரோனா தொற்று மீண்டும் வந்தால் மாநிலம் தாங்காது. மாநிலத்தின் வருவாய் குறைந்துள்ளது, மத்திய அரசின் உதவியும் இல்லை" என்றார்.
தொடர்ந்து புதுச்சேரியில் நடைபெற்றுவரும் கொலை சம்பவங்கள் குறித்துப் பேசிய அவர், "காங்கிரஸ் மாநில பொதுச்செயலர் ஏ.கே.டி. ஆறுமுகம் ரவடி கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். வெடிக்குண்டு வீசி, ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் மிகப்பெரிய சதி உள்ளது. இந்த சம்பவத்தை காவல் துறை தீவிரமாக விசாரிக்கிறது. அவருக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொலை, கொள்ளையில் ஈடுபடுவோரை அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் ஊக்குவிக்கிறார்கள். மேட்டுப்பாளையம் பகுதியில் தொடர் கொலைக்கு அப்பகுதி அரசியல் தலைவர்கள் பின்னணியில் இருக்கிறார்கள். அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டோரை அரசு விட்டுவைக்காது" என்று எச்சரித்தார்.
பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு குறித்துப் பேசிய அவர், "புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரி, நிகர்நிலை பல்கைக்கழகங்களில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு தரவேண்டும். இது குறித்து சட்டவரைவு தயார் செய்து, மத்திய சுகாதாரத் துறை ஒப்புதலுக்கு பின் சட்டமாக புதுச்சேரியில் நிறைவேற்றுவோம். 10 விழுக்காடு கோப்புக்கு அனுமதி கிடைத்தவுடன் அதையும் நடைமுறைப்படுத்துவோம். அரசுப் பள்ளி மாணவர்களின் கனவை நினைவாக்க அனைத்து முயற்சியும் எடுப்போம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடுப்படியில்கூட மீத்தேன் எடுக்க அனுமதியளித்தவர் ஸ்டாலின்; ஓ.எஸ்.மணியன் தாக்கு