புதுச்சேரி வைத்திக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதி பழைய சாராய ஆலை குடியிருப்புச் சாலையோர வாய்க்காலில், ஏப்ரல் 22ஆம் தேதி, 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் உடல் அழுகிய நிலையில் கிடந்தார். முத்தியால்பேட்டை காவல் துறையினர் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சடலமாக கிடந்த இளைஞர் யார்?
இறந்த இளைஞர் யார் என விசாரித்ததில், அவர் குயிலாப்பாளையத்தைச் சேர்ந்த பரத் (25) என்பதும், கொத்தனார் வேலை செய்து வருகிறார் எனவும் தெரியவந்தது. இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பரத்தின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அப்போது பரத் உடலில் கழுத்து, முதுகு உள்ளிட்ட பல இடங்களில் கல்லால் தாக்கிய காயங்கள் இருப்பது தெரியவந்தது. அதனால், பரத் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
கொலை நிகழ்ந்தது எப்படி?
இதையடுத்து, இவ்வழக்கை கொலை வழக்காக காவல் துறையினர் பதிவுசெய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், பரத் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு திரைப்படம் பார்க்க புதுச்சேரி வந்துள்ளார்.
ஆனால், அவர் திரைப்படம் பார்க்கச் செல்லாமல், கருவடிக்குப்பம் சாராயக்கடைக்கு சென்று சாராயம் குடித்துள்ளார். மேலும் குடிக்க பணம் இல்லாததால், அங்கிருந்த மூவரிடம் சாராயம் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அவர்கள், பரத்தை அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பின், பரத் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
பரத்தை அழைத்துச் சென்று கொலை செய்தது யார்?
அதனால், பரத்தை அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் வைத்திக்குப்பத்தைச் சேர்ந்த அருண்குமார், மனோஜ்குமார், ஏழுமலை ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில் தாங்கள்தான் கொலை செய்தோம் என்று மூவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.