மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடைமேம்பாலத்தின் பெரும்பகுதி நேற்றிரவு இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 29 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் விபத்து குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பேரிடர் மேலாண்மை குழு அதிகாரிகள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டெடுத்தனர்.
இதனிடையே விபத்து குறித்து போலீசார் கூறுகையில், தெற்கு மும்பையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டத்தையும், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தையும் இணைக்கும் நடைமேம்பாலத்தின் பெரும்பகுதி நேற்றிரவு 7.30 மணியளவில் இடிந்து விழுந்தது.
அப்போது அந்த பாலத்தின் கீழே சென்று கொண்டிருந்த சில வாகனத்தின் மீது பாலத்தின் இடிபாடுகள் விழுந்தன.
சற்று எதிர்பாராத நேரத்தில் நடைபெற்ற இந்த திடீர் விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது எனக் கூறினார். இதனிடையே விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விபத்து குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மும்பை நடைமேம்பால விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.