கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. பெருந்தொற்றால் இதுவரை 35,043 பேர் பாதிப்படைந்துள்ளனர். தொற்று காரணமாக இதுவரை 1,147 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை வகைப்படுத்தி சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.
50 பேர் மேல் பாதிக்கப்பட்டால் அந்தப் பகுதியை சிவப்பு மண்டலமாகவும் 50 பேருக்கு கீழ் பாதிக்கப்பட்டிருந்தால் அந்தப் பகுதியை ஆரஞ்சு மண்டலமாகவும் சுகாதார அமைச்சகம் வகைப்படுத்தியது.
பாதிப்பு இல்லா பகுதிகளை பச்சை மண்டலமாக அமைச்சகம் அறிவித்தது. சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட 130 பகுதிகள் சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 284 மாவட்டங்களை ஆரஞ்சு மண்டலமாகவும் 319 மாவட்டங்களை பச்சை மண்டலமாகவும் அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அதிகப்படியாக 19 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக அமைச்சகம் அறிவித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 14 மாவட்டங்களும் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களும் சிவப்பு மண்டல பட்டியலில் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாமில் 30 பகுதிகள் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 25 பகுதிகள் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் சட்டமேலவைக்கான தேர்தல் தேதி அறிவிப்பு