மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி சாலையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த நடிகர் சல்மான் கானை, அவரது பாதுகாப்பளர்களின் அனுமதியோடு மூத்த பத்திரிகையாளர் அசோக் பாண்டே என்பவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
அதனைக் கண்ட சல்மான் கான் கோபத்தில் அவர் போனை பிடுங்கி அதில் இருந்த புகைப்படங்களை டெலிட் செய்ததுடன், போனில் இருந்த மற்ற அனைத்து தகவல்களையும் டெலிட் செய்துள்ளார். இது குறித்து அசோக் காவல்துறையினரிடம் புகார் தந்ததாகவும் ஆனால் இதுநாள் வரை அவர்கள் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் தற்போது மும்பை நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
அதன் அடிப்படையில் சல்மான் கான் மீது மனரீதியாக காயப்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதன் விசாரணை நீதிமன்றத்தில் வரும் ஜுலை 12ஆம் தேதி நடக்க இருக்கிறது.