தலைநகர் டெல்லி, அதனைச் சுற்றியுள்ள காசியாபாத், ஃபரீதபாத், குருகிராம், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் சில வாரங்களாக காற்று மாசின் அளவு தொடர்ந்து அதிகரித்து மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
வாகனங்கள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானாவில் உள்ள விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பது ஆகியவை இதற்கான முக்கிய காணங்களாக உள்ளன. இதனால், டெல்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு வாகனங்கள் இயக்குவதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக ஆலோசனை நடத்த நேற்று நாடாளுமன்ற நிலைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், இதில் கிழக்கு டெல்லி எம்.பி. கௌதம் கம்பீர், பாஜக எம்.பி. ஹேம மாலினி, மதுரா, சுற்றுச்சூழல் செயலர், வனத்துறைச் செயலர், பருவநிலை மாற்றத்துக்கான செயலர், டெல்லி டெவலெப்மெண்ட் அத்தாரிடி-யின் பிரதிநிதிகள், டெல்லி மாநகராட்சி அலுவலர்கள் என பலர் அதில் பங்கேற்கவில்லை.
இதனால் இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்குக் கண்டனம் தெரிவித்து ஆளும் ஆம் ஆத்மி கட்சி பதிவிட்டிருந்த ட்வீட்டில், "காற்று மாசு தொடர்பாக வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் குறித்தான சுற்றறிக்கை ஒரு வாரத்திற்கு முன்பே வெளியான நிலையில், இந்தக் கூட்டத்தில் கிழக்கு டெல்லி எம்.பி. கௌதம் கம்பீர் பங்கேற்கவில்லை. காற்று மாசினால் டெல்லி வாசிகள் திணறிவரும் வேளையில், கம்பீர் இந்தூர் நகரில் சந்தோஷமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்" என கட்டமாகத் தெரிவித்திருந்தது.
இதற்கு, "என் தொகுதியில் நான் மேற்கொள்ளும் பணிகளை வைத்து அங்குள்ள மக்கள் என்னை மதிப்பிடுவார்கள். அதைவிடுத்து, டெல்லி முதலமைச்சருக்கு ஆதரவாளர்கள் பரப்பும் பொய்ப் பரப்புரையை அவர்கள் நம்பமாட்டார்கள்..." என கௌதம் கம்பீர் ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, காற்று மாசுவை எதிர்கொள்வதற்குக் குழு ஒன்று உருவாக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிங்க : இலங்கை அதிபர் தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு