வசந்த குமார், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரத்தில், 1950ஆம் ஆண்டு, ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்தார். ஹரிகிருஷ்ணா, தங்கம்மை தம்பதிக்கு மகனாய் பிறந்த அவர், பஞ்சாயத்து பள்ளியில் தனது தொடக்க கல்வியைப் பயின்றார். பின்னர், மதுரை விவேகானந்தா கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை முடித்த வசந்தகுமார், 1970களில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும் தனது அண்ணனுமான குமரி அனந்தனின் தேர்தல் பரப்புரைக்கு உதவிடும் நோக்கில் சென்னை வந்தார்.
தேர்தல் முடிவடைந்தவுடன், தொழிலதிபர் வி.ஜி. பன்னீர்தாஸை தொடர்புகொண்ட குமரி அனந்தன், வசந்தகுமாரை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். பின்னர், வி.ஜி.பி. நிறுவனத்தில் 70 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தார். மாவட்டம் முழுவதும் வாடிக்கையாளர்களிடம் மாத தவணையை பெரும் பணியை அவர் மேற்கொண்டார். அவரின் கடும் உழைப்பை அறிந்துகொண்ட நிர்வாகம், வசந்தகுமாருக்கு கிளை மேலாளராகப் பதவி உயர்வு தந்தது. இதன்மூலம், மாதம் 300 ரூபாயை ஊதியமாக அவர் பெற்றார்.
நிறுவனத்தை விரிவுப்படுத்த விரும்பிய வி.ஜி.பி. நிறுவனம், அவருக்கு மேலும் பதவி உயர்வு அளித்து மும்பைக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டது. ஆனால், தமிழ்நாட்டில் தனது அடையாளத்தைப் பதிவுசெய்ய விரும்பிய அவர், தனியாக நிறுவனம் ஒன்றை தொடங்க திட்டமிட்டார். விற்பனைத் துறையில் அவரின் அனுபவம் பேருதவியாக இருந்தபோதிலும், முதலீடு செய்ய அவரிடம் தொகை இல்லை.
விஜிபி நிறுவனத்தில் பணிபுரிந்தபோது தனக்கு கிடைத்த நண்பரின் உதவியால், சென்னை தி.நகரில் உள்ள ஒரு வணிக வளாகம் அவருக்கு வாடகைக்கு கிடைத்தது. ஆறு மாதத்திற்கு பிறகு, வாடகையை அளித்துக் கொள்ள வணிக வளாகத்தின் உரிமையாளர் வசந்த குமாருக்கு அனுமதி அளித்தார்.
1978ஆம் ஆண்டு, வசந்த் & கோ நிறுவனத்தை அவர் நிறுவினார். 25 ரூபாய் மதிப்பில் ஆடம்பர நாற்காலியை விற்று, வசந்த் & கோ நிறுவனம் தனது வெற்றிப் பயணத்தை தொடங்கியது. ஒரு நாளைக்கு நான்கு நாற்காலிகளைத் தவணை முறையில் வசந்தகுமார் விற்றுவந்தார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகமான வண்ண தொலைக்காட்சி அவரின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது.
1985ஆம் ஆண்டு தொழிலை விரிவுப்படுத்த சக்தி பைனான்ஸ், அசோக் லேலண்ட் ஆகிய நிறுவனங்களுடன் வசந்த் & கோ இணைய திட்டமிட்டது. இதற்காக, வசந்தகுமார் தினமும் ஆறு மாத காலத்திற்கு இரண்டரை மணி நேரம் பயணம் செய்து எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் அலுவலகத்திற்குச் சென்றார். வசந்தகுமாரின் விடாமுயற்சியால், 960 வண்ண தொலைக்காட்சிகளை விற்கும் ஆர்டர் நாட்டிலேயே முதன்முதலில் வசந்த் & கோ நிறுவனத்திற்கு கிடைத்தது.
வசந்த் & கோ நிறுவனத்திற்குத் தமிழ்நாடு முழுவதும் 86 ஷோரூம்கள் உள்ளன. வீட்டு உபயோகப் பொருள்கள், மொபைல் போன்கள் ஆகியவற்றை அந்நிறுவனம் தொடர்ந்து விற்றுவருகிறது. 2008ஆம் ஆண்டு, வசந்த் டிவியை அவர் தொடங்குகிறார். வெற்றிக்கொடி கட்டு, மூன்று பாகங்கள் கொண்ட வெற்றி படிக்கட்டு ஆகிய புத்தகங்களின் மூலம் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதினார். இது, வசந்த் தொலைகாட்சியில் தொடராகவும் வெளியானது.
நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினராக 2006ஆம் ஆண்டு அவர் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணனுக்கு எதிராக களமிறங்கி தோல்வி அடைந்தார். இதையடுத்து, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். கடந்த 2019ஆம் ஆண்டு, கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையும் படிங்க: வசந்தகுமாரின் சமூக செயல்பாடுகள் மதிக்கத்தக்கவை - மோடி புகழ் அஞ்சலி