மத்தியப் பிரதேச மாநிலம் மந்தாசூர் மாவட்டத்தில் நவுகான் என்ற கிராமம் உள்ளது. இங்கு, இறுதிச் சடங்கு செய்ய போதிய கட்டுமான வசதிகள் இல்லாததால் யாரேனும் மரணித்துவிட்டால், ஆபத்தான வாய்க்கால் மற்றும் ஆற்றைக் கடந்து சென்றால் சுடுகாட்டுக்கு செல்ல முடியும். மரணித்தவர்களின் உடலை, சுடுகாட்டுக்கு அவ்வளவு எளிதில் எடுத்து செல்ல முடியாது. உயிரைப் பணயம் வைத்தால் மட்டுமே இது சாத்தியம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வயதான பெண்மணி ஒருவர் அப்பகுதியில் மரணித்துவிட, அவரது உடலை எடுத்துச் செல்ல முடியாமல், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பல ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் எங்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. எங்களுக்கு போதிய கட்டுமான வசதிகள் செய்து தரப்பட வேண்டும்’ என்றனர்.
மேலும், இதுகுறித்து அப்பகுதி எம்எல்ஏ யஷ்பால் சிங் சிஷோசியா கூறுகையில், “கடந்த ஆண்டு இப்பகுதிக்கு ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இக்கிராமத்தை மற்ற கிராமங்களுடன் இணைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் அக்கிராம மக்கள், இறுதிச் சடங்கு நடத்த முடியாமல் அவதிப்படுவது எனக்கு தற்போதுதான் தெரியும்” என்று கூறியுள்ளார்.