மத்திய சாலை, போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஜூலை 15ஆம் தேதி மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மக்களவையில் அறிமுகம் செய்தார். இதே சட்டத் திருத்தம்தான் 2017ஆம் ஆண்டு மக்களவையில் நிறைவேறியது. ஆனால் மாநிலங்களவையில் நிறைவேறாததாலும், 16ஆவது மக்களவை கலைக்கப்பட்டதாலும், இந்த சட்டத் திருத்தம் காலாவதியானது.
ஓட்டுநர் உரிமம் திரும்பப்பெற்றால், அவர்களை புதுப்பித்துக் கொள்வதற்கு வகுப்புகள் நடத்துதல், சாலை விதிகள் மீறப்பட்டால் சமூக சேவை செய்தலை தண்டனையாகத் தருவது போன்றவை இச்சட்டத்தில் திருத்தமாக கொண்டு வரப்பட்டுள்ளது. விபத்தின் போது காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்பவர்களை தேவையில்லாமல் தொந்தரவு படுத்துவதில் இருந்து பாதுகாத்தல் போன்றவையும் இந்த சட்டத்தில் திருத்தமாக இடம்பெற்றுள்ளது. இந்த சட்டம் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கிறது என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையிலும், மக்களவையில் நிறைவேறியது.