கரோனா வைரஸ் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு மக்களவை மற்றும் மாநிலங்களவையின் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதை தீர்மானிப்பது மத்திய அரசிற்கு பெரும் சவாலாக உள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டுத்தொடர் ஆகஸ்ட் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் (சி.சி.பி.ஏ) கூட்டத்திற்குப் பிறகுதான் இரு அவைகளின் செயல்பாடுகள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாலும், தகுந்த இடைவெளியுடன் உறுப்பினர்களின் இருக்கைகளை ஏற்பாடு செய்வது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்வதற்கு, சென்ட்ரல் ஹால் மற்றும் ஜி.எம்.சி பாலயோகி ஹால் தவிர இரு அவைகளின் அரங்குகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
மழைக்கால கூட்டுத்தொடர் நடத்துவது குறித்து தங்கள் கருத்துக்களை, மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்கள் மூலம் தெரிவிக்க எம்பிக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தவிர, மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவை தலைவர் ஆகியோரும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.