சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் குறையாத நிலையில், சீனாவில் மார்மோட் எனப்படும் அணிலின் இறைச்சியை பச்சையாய் சாப்பிடுவதால் நோய்த் தொற்றும் பரவும் அபாயம் உள்ளதாக, சீனாவில் மங்கோலியாவைச் சேர்ந்த பயானுார் நகரம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேற்கு மங்கோலியாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன், புபோனிக் பிளேக் நோயால் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக உள்ளூர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்மோட் எனப்படும் நோய்த் தொற்றால் பாதிப்படைந்த அணிலினால் தான் சிறுவனுக்கு பிளேக் நோய் பரவியுள்ளது உறுதியாகியுள்ளது. தற்போது, சிறுவனிடம் தொடர்பிலிருந்த 15 நபர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்”எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கினால் கோபி-அல்தாய் மாகாணத்தின் ஒரு பகுதியை தனிமைப்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதே போல், மங்கோலியாவின் வடக்கு பிராந்தியத்தில் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.