கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவிவருகிறது. இதுகுறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, "உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸ் குறித்த செய்திகளை நாம் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்த அச்சுறுத்தல் மனித இனத்திற்கு எதிராக போர் தொடுத்துள்ளது.
கரோனா தொற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான மருந்தை மருத்துவர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இந்தச் சூழ்நிலை என்னைக் கவலை கொள்ள செய்கிறது. கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற எண்ணம் கடந்த சில நாள்களாக தோன்றியது.
ஆனால், அது உண்மை இல்லை. எனவே, இந்தியர்கள் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம். கரோனா வைரஸ் பரவல் குறித்த விவரங்களை தொடர்ந்து கவனித்துவருகிறோம். பெரும் மக்கள் தொகை கொண்ட வளரும் நாடான இந்தியாவில் கரோனா வைரஸ் தொடர்ந்து பரவிவருகிறது.
இது அசாதாரணமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் வெளியிட்ட ஆலோசனைகளை குடிமக்கள் பின்பற்ற வேண்டும்.
நம்மை நாமே பாதுகாத்து கொள்ள கட்டுப்பாடுகள் விதித்து கொள்வது முக்கியம். வரும் வாரங்களில் அவசிய தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியேறுங்கள் என மக்களை கேட்டுக் கொள்கிறேன். மார்ச் 22ஆம் தேதி, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கைப் பின்பற்றக் கோரிக்கை விடுக்கிறேன். வரும் வாரங்களில், 65 வயதை தாண்டிய முதியவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.
மார்ச் 22ஆம் தேதி நாடு முழுவதும் விதிக்கப்படவுள்ள கட்டுப்பாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவசர தேவையில்லாத அறுவைச் சிகிச்சையை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். கரோனாவைத் தவிர்த்து மற்ற மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனை செல்வதைத் தற்காலிகமாக தவிர்க்க வேண்டும். மருத்துவர்களின் அழுத்தத்தை குறைக்க வேண்டும்.
அத்தியாவசியப் பொருள்களை வாங்க வேண்டும் என்ற அச்சம் கொள்ள வேண்டாம். மக்களுக்குத் தேவையான அளவுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் லட்சக்கணக்கான அலுவலர்கள் தங்களின் நலனில் கூட கவனம் செலுத்தாமல் மற்றவர்களுக்காக இரவு பகல் பாராமல் பணிபுரிந்துவருகின்றனர்.
மார்ச் 22ஆம் தேதி, மாலை 5 மணிக்கு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வீட்டின் நுழைவுவாயில்களில் நின்று மக்கள் கைத்தட்ட வேண்டும். கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்னையை மீட்கும் வகையில், நிதியமைச்சரின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு தேவைக்கேற்ப திட்டங்களை வகுத்து நடவடிக்கைகளை எடுக்கும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா அச்சத்தின் எதிரொலி - தேர்வுகள் ஒத்திவைப்பு