டெல்லி: உலகின் தலைசிறந்த பல்வேறு துறை சார்ந்த வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் பங்கேற்கும் பிரராம்ப் ஸ்டார்ட்-அப் இந்தியா சர்வதேச மாநாடு வரும் 15, 16 ஆகிய தேதிகளில் காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், நாட்டின் இளையதொழில் முனைவோர்கள் பங்கேற்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பான தகவலை அவரது லிங்கிடின் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், கரோனா காலத்தில் வீட்டிலிருந்தபடியே இதுபோன்ற மாநாட்டில் நாம் பங்கேற்கும் வகையில், மிகப்பெரிய நன்மை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "பெரும்பாலான நிகழ்ச்சிகள் காணொலி வாயிலாக நடைபெற்றுவரும் நிலையில், வரும் ஜனவரி 15, 16 ஆகிய தேதிகளில் உள்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டு நிறுவனங்களும் கலந்துகொள்ளும் பிரராம்ப் சர்வதேச மாநாட்டில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இளம் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து இந்த சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: சீன வீரரை திரும்ப ஒப்படைத்த இந்தியா