அகமதாபாத் நகரிலுள்ள மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான மொடீரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், "ராணுவ ஹெலிகாப்ட்டர் வாங்குவது தொடர்பான மூன்று பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தம் செவ்வாய்கிழமை கையெழுத்தாகிறது. உலகின் மிகச் சிறந்த ராணுவ உபகரணங்களை இந்தியாவுக்கு அமெரிக்கா அளிக்கவுள்ளது. மிகச் சிறந்த ஆயுதங்களை நாங்கள் தயாரிக்கிறோம். இப்போது, இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்கிறோம்.
இந்தப் பயணத்தின்போது இரு நாடுகளுக்குமிடையேயான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகவுள்ளது. இதன் மூலம் பொருளாதார ரீதியாக இரு நாடுகளும் பெரும் பலனடையவுள்ளது" என்றார்.
மேலும், ட்ரம்ப் தனது உரையில், இந்தியாவின் சிறப்புகள் குறித்தும் மோடியின் சாதனைகள் குறித்தும் பாராட்டிப் பேசினார். "இந்தியாவையும் இந்தியர்களையும் நாங்கள் நேசிக்கிறோம். மிகவும் நேசிக்கிறோம்" என்று கூறி ட்ரம்ப் தனது 27 நிமிட உரையை நிறைவு செய்தார்.
சீனா தனது பொருளாதாரம் மற்றும் ராணுவ பலத்தை அதிகரித்துவரும் சூழலில், அதிபர் ட்ரம்பின் இந்த உரை சர்வதேச அளவில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக செயல்படவுள்ளது என்பது சர்வதேச நாடுகளுக்கு குறிப்பாக சீனாவுக்கு தெரிவிக்கும் விதமாகவே அமைந்துள்ளது ட்ரம்பின் இந்த உரை.
முன்னதாக வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவிஷ் குமார், "அறிவுசார் சொத்துரிமை, வர்த்தக வசதி, உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான ஒப்பந்தங்கள் ட்ரம்பின் பயணத்தில் இறுதி செய்யப்படும்" என்றார்.
இதையும் படிங்க: 'தாஜ் மஹாலின் ஆடம்பரமும் அழகும் பிரமிக்க வைக்கிறது' - ட்வீட் செய்த இவாங்கா ட்ரம்ப்