பிரதமர் நரேந்திர மோடி உத்ரகாண்ட் மாநிலம் கேதார்நாத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார். நேற்று அங்குள்ள பிரசித்திப்பெற்ற கேதார்நாத் கோயிலில் பிரார்த்தனை மேற்கொண்ட மோடி, அதைத் தொடர்ந்து அங்குள்ள பனிக்குகையில் இரவு முழுவதும் தியானம் செய்தார்.
இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மோடி, 'கேதார்நாத்திற்கும் தனக்கும் உணர்வுப்பூர்வமான உறவு இருந்துவருகிறது. எனவே அங்கு வழிபாடு செய்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை பேரழிவுக்கு பின் கேதார்நாத்தை மீண்டும் மேம்படுத்துவதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
நம் நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று கூறவில்லை, அதே சமயத்தில் அவர்கள் நம் நாட்டில் உள்ள பல்வேறு வித்தியாசமான இடங்களை பார்க்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.
முன்னதாக இன்று காலை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், இன்று நடைபெறும் இறுதிகட்ட தேர்தலில் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும். உங்களின் ஒவ்வொரு வாக்கும் நாட்டின் எதிர்கால வளர்ச்சியை நிர்ணயிக்கும். இளைஞர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பார்கள் என நம்புவதாக பதிவிட்டிருந்தார்.