நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத்தொடரில் வேளாண் மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த மசோதாக்கள் தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பின்போது மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.
அமளியில் ஈடுபட்ட எட்டு மாநிலங்களவை உறுப்பினர்களை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு இடைநீக்கம் செய்தார். அவைத்தலைவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எட்டு எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில் விவசாய மசோதாக்கள் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அவையை வழிநடத்திய மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ், இன்று(செப்.22) காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எட்டு எம்.பி.க்களுக்கும் தேநீர் கொண்டு வந்தார்.
ஆனால், அவர் வழங்கிய தேநீரை ஏற்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எம்.பி.க்கள் மறுத்துவிட்டனர்.
இது குறித்த பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இரண்டு நாள்களுக்கு முன் அவர்கள் நாடாளுமன்றத்தில் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்று அனைவரும் பார்த்தார்கள். ஆனால், இப்போது அவர்களே ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் , சில நாட்களுக்கு முன்பு தன்னை அவமதித்தவர்களுக்கு, தனிப்பட்ட முறையில் ஹரிவன்ஷ் ஜி தேநீரை பரிமாறினார். இது அவரது பரந்த மனப்பான்மையையும் மகத்துவத்தையும் காட்டுகிறது.
ஜனநாயகத்தில் இதைவிட வேறு என்ன அழகிய செய்தி இருக்க முடியும். இதற்காக நான் அவரை வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: டெல்லியில் 2ஆவது நாளாகப் போராடும் சஸ்பெண்ட் எம்.பிக்கள் - திருச்சி சிவா இட்லி அனுப்பிவைப்பு!