மக்களவை இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை முடிந்த அடுத்த நாள், கேதர்நாத் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, பாரம்பரிய உடையில் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர், கோயிலில் இருந்து ஒன்றரை கி.மீ., தூரத்தில் உள்ள சிறிய குகை ஒன்றில் தியானம் செய்தார். பிரதமரின் தியானம் செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி, உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 'மோடி குகை' என செல்லமாக அழைக்கப்பட்டு வந்த இந்த குகை, சுற்றுலாத் தலமாகவே மாறிவிட்டது. இதனால், கேதர்நாத் கோயிலுக்கு வரும் மக்கள், சுற்றுலாப் பயணிகள் நிச்சயமாக குகைக்கு ஒரு விசிட் அடிக்காமல் செல்ல மாட்டார்கள்.
இந்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, ஜூலை 1ஆம் தேதி குகை மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. ஆனால், கேதர்நாத் கோயிலுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் வந்தும், குகையைப் பார்க்க யாரும் விருப்பம் காட்டாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கார்வால் மண்டல் விகாஸ் நிகாம் (GMVN) இயக்குநர் ஈவா ஆஷிஷ் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், "முந்தைய ஆண்டு ஜூன் மாதம் முதலே குகை மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையே, சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் குகையினால் வருவாய் கிடைத்தது.
பிரதமர் மோடி இங்கு தியானித்ததிலிருந்து இந்த குகை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாக மாறியுள்ளது. ஆனால், தற்போது கரோனா தொற்று அச்சம் காரணமாக, 2020ஆம் ஆண்டில், இதுவரை எங்களுக்கு எந்த முன்பதிவும் கிடைக்கவில்லை. கேதர்நாத் கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வந்தாலும், கரோனா அச்சத்தின் காரணமாக குகையைப் பார்வையிடுவதைத் தவிர்க்கின்றனர்" என்றார்.