மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் நடைபெற்ற பரப்புரையில் , “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்று பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு இந்து அமைப்பினர், பாஜகவினர் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
பாஜகவினரே கமலின் கருத்தை மிதத்தன்மையுடன் அணுகிக் கொண்டிருக்கையில், சர்ச்சை புகழ் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ ஒருபடி மேலே போய், 'கமலின் நாக்கை அறுக்க வேண்டும்' என பேசியது இந்த விவகாரத்தில் மேலும் சர்ச்சையை வலுப்படுத்தியது.
இந்நிலையில், பிரதமர் மோடி ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது கமல்ஹாசன் கருத்து குறித்து பதிலளிக்கையில், “இந்து ஒருபோதும் தீவிரவாதியாக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அவன் இந்து அல்ல. எந்த ஒரு தீவிரவாதியும் இந்து மதத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது” என கூறினார்.