நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்தாயிரத்து 735ஆக அதிகரித்துள்ளது. அம்மாநிலத்தில் கடந்த பத்து நாள்களில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக ரைவஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அம்மாநில அரசு சில நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக மருத்துவமனைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சைப் பெற்றுவருபவர்கள் மொபைல் போன்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில அரசு பிறப்பித்த உத்தரவின்படி, கரோனா சிகிச்சை மையத்தின் பொறுப்பாளர்களிடம் இரண்டு மொபைல் போன்கள் இருக்கும், நோயாளிகளுக்கு தேவைப்படும்பட்சத்தில் அவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகத்துடன் பேசலாம். மேலும், இந்த மொபைல் எண்களை நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை வெளியிட்ட பொது மருத்துவக் கல்வி இயக்குநர் கே.கே. குப்தா, கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகள், தங்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது வேறு யாருடனும் தொடர்புகொள்வதற்கு வசதியாக, தொற்று தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து மொபைல் போன்களை மையத்தின் பொறுப்பில் வைக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்" என கூறினார்.
இதையும் படிங்க: ஒடிசாவில் கரோனாவுக்கு எதிராக போராடும் கர்ப்பிணி செவிலி