கர்நாடகா மாநிலத்தின் ஹூப்ளி - தார்வார்ட் என்ற இரட்டை நகரம் பெங்களூருவிற்கு அடுத்த பெரிய நகரப் பகுதியாகும். இங்கு முதல் முறையாக விலங்குகளுக்கான நடமாடும் கிளினிக்கினை ஹுயுமன் சொசைட்டி இண்டர்நேஷனல் இந்தியா (Humane Society International (HSI)) என்ற அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.
பெரும்பாலும், தெருவில் திரியும் நாய், பூனை போன்ற பிராணிகளுக்கு உணவு கொடுக்கவோ, அவற்றின் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவோ பெரும்பாலானோர் விரும்புவதில்லை. இந்த அலட்சியப் போக்கால் அநேக விலங்குகள் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சையின்றி சாலையோரங்களில் உயிரிழந்து கிடக்கும்.
கவனிப்பாரற்று வாழும் அந்த விலங்குகளின் ஆரோக்கியம் பேணுவதே இந்த நடமாடும் கிளினிக்கின் முதன்மை நோக்கம் என்கிறார் மருத்துவர் வினுட்டா.
காயம்பட்ட விலங்குகள், நோய்வாய்ப்பட்ட விலங்குகள் குறித்து இந்த நடமாடும் கிளினிக்கிற்கு ஒரே ஒரு அழைப்பு விடுத்தால் போதுமானது. அவர்கள் அந்தக் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பார்கள். அத்தியாவசியமான அறுவை சிகிச்சைகளையும்கூட இவர்கள் செய்துவிடுவதாகத் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக இந்த வாகனத்தில் விலங்குகளின் சுகாதார பராமரிப்புக்கான தடுப்பூசி போடும் வசதியுடன், நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை முறைகளுக்கான வசதியும் உள்ளது. வடக்கு கர்நாடகாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கிளினிக் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் இயங்கும்.
இதையும் படிங்க:'மிஷன் 0 ஈரோடு', நடமாடும் கரோனா பரிசோதனை மையம் பொதுமக்கள் வரவேற்பு!