நாட்டில் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடைசியாக 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான பணி தற்போது தொடங்கியுள்ளது. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ளவர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவ்பா (Rajiv Gauba) டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதில் பேசிய அவர், இந்தியாவின் 140 ஆண்டுகால மக்கள் தொகை கணக்கெடுப்பு வரலாற்றில் முதல் முறையாக கணக்கெடுப்பு செல்போன் செயலி மூலம் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார். இதனை உலகின் மிகப்பெரிய கணக்கெடுப்பு பணி என குறிப்பிட்ட அவர், இதில் 33 ஆயிரம் பணியாளர்கள் ஈடபடவுள்ளதாகவும் அவர்கள் தங்கள் சொந்த செல்போனிலேயே கணக்கெடுப்பு நடத்துவர் என்றும் கூறினார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வெறும் மனிதர்கள் கணிக்கிடும் வேலை அல்ல என்று கூறிய ராஜீவ் இதன்மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக-பொருளாதார மாற்றங்களை கண்டறிந்து அதற்கேற்ப அரசின் கொள்கை திட்டங்கள் வடிவமைக்கப்படும் என்றார்.
இந்த கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என மத்திய கணக்கெடுப்பு ஆணையர் விவேக் ஜோஷி தெரிவித்துள்ளார்.