கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. முதலமைச்சராக மஜத தலைவர் குமாரசாமி பதவி வகித்து வந்தார்.
2018 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்:
- மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 224
- பாஜக - 104
- காங்கிரஸ் - 80
- மதச்சார்பற்ற ஜனதாதளம் + பகுஜன் சமாஜ் - 38
- சுயேச்சை - 2
இவர்களில் ஆட்சி அமைக்கும் அளவு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததையடுத்து, காங்கிரஸ் - மஜத இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. இவர்களுக்கு இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதரவளித்த நிலையில், 120 எம்எல்ஏக்களின் ஆதரவோடு குமாரசாமி ஆட்சி செய்து வந்தார். இருப்பினும் இவர்களுக்கு அடுத்த நிலையில் 105 (ஒரு நியமண உறுப்பினர்) எம்எல்ஏக்கள் பலத்தோடு பாஜக இருந்ததால் குமாரசாமி ஆட்சிக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என யூகிக்கப்பட்டது.

அதனை உறுதிப்படுத்தும் விதமான காட்சிகளும் அவ்வப்போது நடந்தேறி வந்தன. அதன் உச்சக்கட்டமாக ஜூலை முதல் வாரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் என்பவர், குமாரசாமி அரசு மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்த, அடுத்தடுத்து 16 எம்எல்ஏக்கள் அவருடன் கைகோர்த்தனர். இதற்கிடையே, எஞ்சிய எம்எல்ஏக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக முதல் மூன்று அதிருப்தி எம்எல்ஏக்களை சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தார். இதைப்பார்த்து பயந்து அவர்களுடன் சென்ற அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்களின் முடிவை பரிசீலிப்பர் என காங்கிரஸ் மேலிடம் கணக்கு போட்டது. ஆனால் அவர்கள் மசியவில்லை.

காங்கிரஸ் கட்சியின் அரசியல் கில்லாடியாக பார்க்கப்படும் சிவக்குமார் எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. குமாரசாமியின் உருக்கமான பேச்சுகளுக்கும் அவர்கள் செவி மடுக்கவில்லை. அதன் நீட்சியாக பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. முதலமைச்சர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். இது ஒருபுறமிருக்க, அடுத்த நிலையில் இருந்த பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் உரிமை கோரியது. ஆளுநரும் பாஜகவாயிற்றே, சொல்லவா வேண்டும்... எடியூரப்பா முதலமைச்சர் ஆக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், தற்போது அமைந்துள்ள புதிய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு, பேரவையில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் ஏற்கனவே தகுதிநீக்கம் செய்யப்பட்டிருந்த 3 எம்எல்ஏக்களுக்கு துணையாக அவர்களுடன் சென்ற 14 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், பேரவைத் தலைவருக்கான வானலாவிய அதிகாரத்தின் ஒரு துளியை சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று சுண்டிவிட்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் முணுமுணுக்கின்றனர்.

எடியூரப்பா அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கும் நிலையில், 17 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது பாஜகவுக்கு காங்கிரஸ் வைத்த மறைமுக ‘செக்’ஆக பார்க்கப்படுகிறது. ஆனால், 224இல் 17 நீங்கலாக 207 எம்எல்ஏக்கள் தான் அவையின் மொத்த பலம் என்ற பட்சத்தில், பெரும்பான்மையை நிரூபிக்க 105 உறுப்பினர்களின் ஆதரவு போதுமானது. ஒரு சுயேச்சை எம்எல்ஏவின் ஆதரவையும் சேர்த்து 106 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு இருக்கின்றனர். இதில் யாரேனும் பின் வாங்கினாலோ அல்லது, வர முடியாமல் போனாலோ அரசுக்கு சிக்கல் ஏற்படக்கூடும். ஆனால், மூன்று முறை முதலமைச்சராக இருந்துள்ள எடியூரப்பாவுக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
ஒருவேளை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றம் சென்று, சபாநாயகர் உத்தரவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் (தமிழ்நாட்டில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு போல்) 17 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கும். இதில் எட்டு இடங்களில் பாஜக வெற்றிபெற்றாலே, ஒட்டுமொத்த பெரும்பான்மையான 113 என்ற எண்ணை எட்டிவிட முடியும்.

அதேபோல், 17 தொகுதிகளிலும் காங்கிரஸ் - மஜத கூட்டணி வெற்றிபெறும் பட்சத்தில், மீண்டும் இவர்களின் ஆட்சி அமையக்கூடிய சூழலும் உருவாகும். அரசியல் மாய ஜாலங்களில் எதுவும் நடக்கலாம் என்பது போல், பாஜகவும் - மஜதவும் கைகோர்த்துக்கொண்டு காங்கிரஸை கழட்டிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் சில விவரமறிந்தவர்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.