தெலங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஜனகம மண்டல் யேஷ்வந்த்பூர் கிராமம். இப்பகுதிலிருந்து கழிவுநீரைச் சுத்திகரித்து யேஷ்வந்த்பூருக்கு அனுப்ப ஏதுவாக கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இந்தக் கால்வாய் அமைக்கும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இதனை நிறுத்தக்கோரியும் ஜனகம கிராம மக்கள் அம்மாநில உயர் நீதிமன்றத்தை அணுகினர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம் கால்வாய் அமைக்கும் பணிக்குத் தடைவிதித்து உத்தரவிட்டது.
இந்தத் தடை உத்தரவிற்கு தெலங்கானா சட்டப்பேரவை உறுப்பினர் யாதகிரி ரெட்டி அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜனகம மண்டல் யேஷ்வந்த்பூர் கிராமத்தில் அமைந்துள்ள அணையை ஆய்வுமேற்கொள்ள எம்எல்ஏ யாதகிரி ரெட்டி சென்றார். அப்போது, கால்வாய் கட்டுமானத்திற்குத் தடைவிதிக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையில், கிராம மக்கள் முன்பு தரையில் புரண்டு நூதனமான முறையில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
தரையில் புரண்டவாரே கிராமத்திற்கு கழிவுநீர் வராது என்றும், சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே வரும் என்றும், கால்வாய் கட்டுமானத்தை மேற்கொள்ள தடையாக இல்லாமல் கிராம மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் எம்எல்ஏ யாதகிரி ரெட்டி கிராம மக்களிடம் வேண்டுகோள்விடுத்தார்.
அப்போது, கிராமத்தில் மாசுபட்ட நீரை குடிநீராகப் பயன்படுத்துவதாகவும், கால்வாயை விரிவுபடுத்தி கிராமத்தில் தூய்மையான தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கைவைத்தனர்.
இதையும் படிங்க: 'போராடும் விவசாயிகள் குறித்து அவதூறு பரப்பும் மத்திய அமைச்சர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்'