புதுச்சேரி மாநில பாஜக தலைவராக 2015ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர் சுவாமிநாதன். இவரது தலைமையில் நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு நிறைவடைந்தது. புதிய நிர்வாகிகளுக்காக தேர்தல் நடைபெறுவதில் இழுபறி நீடித்து வந்தது. அதனால், இவர்களின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தொகுதி, மாவட்டத்திற்கான நிர்வாகிகள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. மாநில தலைவர் பதவிக்கான தேர்தல், புதுச்சேரி கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதற்காக, மத்திய அமைச்சர் பிரகலாதசிங் தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் நரேந்திரன் ஆகியோர் புதுவை வந்திருந்தனர்.
கூட்டத்தின் முடிவில் பாஜகவின் புதுச்சேரி மாநில தலைவராக சுவாமிநாதன் எம்எல்ஏ மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரகலாதசிங் வெளியிட்டார். இதையடுத்து கட்சியின் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் புதுச்சேரி மாநில தலைவர்கள் விஸ்வேஸ்வரன் தாமோதரன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.