புதுச்சேரியில் கரோனா வைரஸ் (தீநுண்மி) அதிகரித்து வருவதால், மாவட்ட ஆட்சியர் அருண் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் 32 பகுதிகளைத் தொற்றுப் பாதிப்பு அதிகரிக்கும் இடங்கள் என்று அறிவித்தார்.
அதன் அடிப்படையில் இன்று முதல் (ஆக. 31) செப்டம்பர் 6ஆம் தேதி வரை, இந்த 32 இடங்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு, மக்கள் யாரும் செல்லாமல் இருக்க, நேற்று(ஆகஸ்ட் 30) அப்பகுதியில் காவல் துறையினர் தடுப்பு இரும்பு வேலிகளை அமைத்தனர்.
இதைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு வந்த முத்தியால்பேட்டை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வையாபுரி மணிகண்டன், அந்தத் தடுப்பு வேலிகளை அகற்றினார். சட்டப்பேரவை உறுப்பினரின் இந்தச் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மக்களுக்கு நிவாரணம் வழங்காமல், ஊரடங்கு அறிவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆகஸ்ட் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வையாபுரி மணிகண்டன் தர்ணா போராட்டம் நடத்தியது நினைவுகூரத்தக்கது.