புதுச்சேரி ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 2 ஆயிரம் கொடுத்து குட்டி நாய் ஒன்றை வாங்கி வந்துள்ளார். அவரும் எல்லோரையும் போல் அந்த நாயை செல்லமாக வளர்த்ததால், வீட்டின் ஒரு பிள்ளையாக நாய் மாறியது. செல்விக்கு தேவையான பெரும்பாலான உதவிகளை அந்த நாய் செய்து வந்துள்ளது. இதைப் பார்த்த செல்வியும் அந்த நாய்க்கு ’டாமி’ என்று பெயர் வைத்து கவனமுடன் வளர்த்து வந்தார்.
இப்படி நாளுக்கு நாள் இருவரது பாசமும் வளர்ந்தது போல, அந்த டாமியின் வளர்ச்சியும் அதிகரித்தது. இதனால் செல்வி உறவினர்களைத் தவிர வேறு யார் வந்தாலும், டாமி உள்ளே விடுவதில்லை. இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் செல்வி வீட்டிற்கு அந்நியர்கள் வந்துள்ளனர். இதைப் பார்த்த டாமி அவர்களை உள்ளே விடாமல் குரைத்துள்ளது.
இப்படியிருக்கையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு டாமி மாயமாகியுள்ளது. இதில் அதிர்ச்சியடைந்த செல்வி செய்வது அறியாமல் திகைத்து போனார்.
விளம்பரம் செய்த செல்வி:
விளம்பரம் கொடுத்தால் காணாமல் போன டாமியை கண்டுப்பிடித்துவிடலாம் என அக்கம்பக்கத்தினர் கொடுத்த யோசனையின் அடிப்படையில் அவர் விளம்பரம் கொடுத்தார். அந்த விளம்பரத்தில், ’டாமியை நான்கு நாட்களாக காணவில்லை, அதை கண்டுப்பிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் கொடுக்கப்படும்’ என குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதனாலும் எந்த பயனும் ஏற்படவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் காவல்துறையை நாட அவர் முடிவு செய்தார்.
நாய் மிஸ்சிங்கை எல்லாம் கம்ப்ளைண்ட்டாக எடுக்க முடியாதும்மா?
பிறகு காவல் துறையில் தனது டாமியை கண்டுப்பிடித்து கொடுக்கும்படி புகார் அளித்துள்ளார். அதற்கு காவல் துறையினரோ, நாய் காணாமல் போனதெல்லாம் கம்ப்ளைண்ட்டாக எடுத்துக்க முடியாதும்மா என பதிலளித்துள்ளனர். ஆனால், செல்வி தொடர்ந்து வற்புறுத்தியதை அடுத்து காவல் துறையினர் புகாரை ஏற்றுக்கொண்டனர்.
சடலமாக மீட்கப்பட்ட டாமி..
புகாரை ஏற்ற காவல் துறையினர் ஜீவா நகருக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் விசாரணையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. பிறகு தீவிரமாக விசாரித்ததில் அதே பகுதியில் உள்ள முட்புதரில் டாமி சடலமாக புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. டாமியின் சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறு ஆய்விற்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாமியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் டாமி, அதன் கழுத்தில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதை கேட்ட உரிமையாளர் செல்வி கதறி அழுதார். மேலும் இதுபோன்ற மனிதாபிமானற்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார். காணாமல் போன நாயை, போனது போகட்டும் என விடாமல், துப்புறிவாளன் திரைப்படத்தில் வரும் சிறுவன் போன்று காவல் நிலையம் வரை சென்று சடலமாக மீட்ட சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.