ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நகரி நகரக் காவல் நிலையத்தில் நேற்று (ஆக.26) காலை 8.30 மணியளவில் இர்பான் என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அதில், "சரக்கு லாரி ஓட்டுநரான நான், தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து சியோமி மொபைல் உற்பத்தி யூனிட்டிலிருந்து (Xiaomi mobile manufacturing unit) ஆயிரக்கணக்கான ஸ்மார்ட்போன்களை லாரி மூலம் மும்பைக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்தேன்.
லாரி செவ்வாய்க்கிழமை (ஆக.25) நள்ளிரவு ஆந்திர - தமிழ்நாடு எல்லையான சித்தூர் வழியே சென்றுகொண்டிருந்தது. அப்போது மற்றொரு லாரியிலிருந்து சிலர் பின் தொடர்ந்துவந்து என்னைத் தாக்கிவிட்டு, லாரியிலிருந்த ஸ்மார்ட்போன்களை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்" எனத் தெரிவித்தார். உடனே காவல் துறையினர், மொபைல் உற்பத்தி நிறுவனத்திற்கும், ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மேலும் சம்பவயிடத்திற்கு வந்த மொபைல்போன் நிறுவன உயர் அலுவலர்கள் லாரியில் சோதனையிட்டனர். அதில் '16 பெட்டிகளில் ஸ்மார்ட்போன்கள் வைத்து அனுப்பப்பட்டிருந்தன. தற்போது அதில் 8 பெட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதன்மதிப்பு ரூ. 2 கோடி இருக்கும்' என்றும் தெரிவித்தனர். இதுகுறித்து பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கொள்ளையர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சேலம் ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி - காவல்துறையினர் தீவிர விசாரணை!