தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், முஸ்தபா நகரில் அமைந்துள்ள ஒரு வீட்டில் 13 வயது சிறுமி பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த வீட்டு உரிமையாளரின் மகன், சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் பாலியல் சீண்டலுக்கு சிறுமி மறுப்புத் தெரிவித்ததால் கோபமடைந்த இளைஞர், சிறுமி மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார்.
தொடர்ந்து, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அந்த இளைஞரின் குடும்பத்தினர், சிறுமியை மீட்டு ரகசியமாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் காவல் துறையை அணுகியபோது இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்து மருத்துவமனை வந்த டி.சி.பி பூஜா, ஏ.சி.பி ஆஞ்சநேயலு ஆகியோர், பாதிக்கப்பட்ட சிறுமியை சந்தித்து விசாரணை நடத்தினர்.
கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி காலை தீப்பிடித்து பூஜை அறையில் இருந்து வெளியே ஓடி வந்த சிறுமி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக காவல் துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிறுமி தற்போது கம்மத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சுமார் 70 விழுக்காடு தீக்காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் முதலமைச்சர் வேட்பாளர் மோடி- பாஜக... அப்போ அதிமுக?