கரோனா பரவலைத் தடுக்கும் முக்கிய நடவடிக்கையாக நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து கடந்த மார்ச் மாத இறுதியில் நிறுத்திவைக்கப்பட்டது. விமானப் போக்குவரத்து சேவை படிப்படியாகத் தற்போது செயல்பட்டுவரும் நிலையில், பயணிகள் ரயில்வே சேவை ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட சுற்றிக்கையில், ”பயணிகள் ரயில் சேவை வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது. சிறப்பு ரயில் சேவைகள் வழக்கம் போல இயங்கும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டுவரும் நிலையில், வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை விரைவு ரயில், பயணிகள் ரயில், புறநகர் ரயில் சேவைகள் இயங்காது என இந்திய ரயில்வேயின் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பாக இந்திய ரயில்வே அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கம் மாற்றுப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”வரும் செப்டம்பர் இறுதிவரை ரயில் சேவை ரத்து என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகிவருகின்றன. இதுதொடர்பாக புதிய அறிக்கையை ரயில்வே அமைச்சகம் வெளியிடவில்லை. சிறப்பு ரயில் சேவை வழக்கம்போல் இயங்கும்” எனத் தெரிவித்துள்ளது.
பயணிகள் ரயில் போக்குவரத்துக்கான தடை இன்னும் இரண்டு நாள்களில் நிறைவடையும் நிலையில், இதுதொடர்பான தெளிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ராகுல் காந்தி இல்லத்தில் சச்சின் பைலட்: சமாதான தூது வெற்றி?