'கமோர்த்தா ரக' நீர்முழ்கி எதிர்ப்பு போர்முறை கார்வெட் கப்பல்களில், திட்டம் 28இன் கீழ் நான்காவதாக உருவாக்கப்பட்ட 'ஐ.என்.எஸ் கவராட்டி' கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெற்றிகரமாக கடல் சோதனைகளில் தேர்ச்சி பெற்றது.
இந்நிலையில், இந்த புதிய போர்க்கப்பல் இன்று (அக்.22) விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை கப்பல்துறை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக ராணுவத் தளபதி ஜெனரல் முகுந்த் நரவனேவால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
90% உள்நாட்டு உள்ளடக்க கட்டுமானத்தால் ஆன இந்த போர்க் கப்பலின் வடிவமைப்பை இந்திய கடற்படையின் துணை அமைப்பான கடற்படை வடிவமைப்பு இயக்குநரகம் (டி.என்.டி) வழங்கியது.
கொல்கத்தாவைச் சேர்ந்த கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (ஜி.ஆர்.எஸ்.இ) நிறுவனத்தால் ஒத்துழைப்புடன் உருப்பெற்ற இந்த கப்பல் 'ஆத்ம நிர்பார் பாரத்' திட்டத்தின் நோக்கத்தை பறைசாற்றுவதாக உருவாகியுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிக சக்திவாய்ந்த நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்களில் ஒன்றாக கருதப்படும்.
ஐ.என்.எஸ் கவராட்டி, உயர் தர (டி.எம்.ஆர் 249 ஏ) எஃகு கனிமத்தைப் பயன்படுத்தி, 109 மீட்டர் நீளமும், 14 மீட்டர் அகலமும் 3 ஆயிரத்து 300 டன் எடையும் கொண்ட வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
அணு, உயிரியல் மற்றும் வேதியியல் (என்.பி.சி) போர் நிலைமைகளை எதிர்த்துப் போரிடும் நவீன உபகரணங்கள் மற்றும் அமைப்புகளுடன் இந்த கப்பல் மேம்பட்ட நிலையைக் கொண்டுள்ளது.
எதிரிக் கப்பல்களை குறிவைத்து தாக்கும் திறன் கொண்ட இத்தகைய நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையின் மரபு சார்ந்த நீர்மூழ்கிகளின் மையமாக இருக்கும் என கடற்படை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கியான இதனை வைத்து கடற்படையினர், சில காலம் பயிற்சி மற்றும் பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்து அவற்றில் தேர்ச்சிபெற்ற 'ஐ.என்.ஏ. கவராட்டி' இன்று நாட்டின் கடற்படையில் இணைக்கப்பட்டது.
1971ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச போரின்போது கடற்புறத்தில் முக்கிய பங்கு வகித்த லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் தலைநகரான கவராட்டியின் நினைவாக, இந்தக் கப்பலுக்கு 'ஐ.என்.எஸ் கவராட்டி' எனப் பெயரிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது