புதுச்சேரி முதலமைச்சருடன் இன்னும் சில நாள்களில் டெல்லி செல்லவுள்ள அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், மத்திய உள்துறை செயலரை சந்தித்து கரோனா நிதி கேட்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலிப் பதிவில், “புதுவை மாநிலம், காரைக்காலில் கரோனா தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள செல்கிறோம். அங்குள்ள மருத்துவப் பற்றாக்குறைகள் அனைத்தும் விரைவில் சரிசெய்யப்படும். அதனைத் தொடர்ந்து நானும் முதலமைச்சரும் டெல்லி செல்லவுள்ளோம்.
அங்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், மத்திய உள்துறை செயலர் ஆகியோரை நேரில் சந்தித்து, கரோனா பணிக்கான நிதியை ஒதுக்குமாறு வலியுறுத்தவுள்ளோம். இதுவரை புதுவைக்கு கரோனா பணிக்காக, வெறும் மூன்று கோடியே 74 லட்சம் ருபாய் மட்டுமே மத்திய அரசு கொடுத்துள்ளது.
புதுவையில் தற்போது நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரம் மாகி செல்லவுள்ளேன். அங்கு நடைபெறும் கரோனா நடவடிக்கைகளை மேற்பார்வையிடவுள்ளேன்.
புதுவை மாநில சுகாதாரத் துறையில் ஆள் பற்றாக்குறை இருப்பதால், கூடுதலாக செவிலியர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தற்போது 200 பேர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். அவர்கள் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரிக்காக பயன்படுத்திக் கொள்ளப்படுவர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் பால் தட்டுப்பாடு: அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்