புதுச்சேரி தனியார் பால் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் சங்கம் மாநிலத் தலைவர் கிருஷ்ணன் இன்று புதுச்சேரி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்:
புதுச்சேரி கால்நடைத் துறையில் 300-க்கும் மேற்பட்ட பதவிகள் காலியாகியுள்ளன. காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால், நோய்வாய்ப்பட்டுவரும் மாடுகளுக்கு வைத்தியம் செய்ய போதிய மருத்துவர்கள், மருந்துகள் இல்லை. புதுச்சேரி அரசு மானியத்தில் வழங்கிவந்த இலவச தீவனங்கள் வழங்கப்படுவதில்லை. இதனால், கால்நடை வளர்ப்பவர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் குடும்பங்களைக் காப்பாற்ற மாடுகளை வளர்த்து, பால் உற்பத்தி செய்து, அதன்மூலம் வரக்கூடிய வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் பால் உற்பத்தியாளர்களைப் பழிவாங்கும்விதமாக, காலி மனைகளில் விளைந்துள்ள பசும்புல்லை மேய்ந்துகொண்டிருக்கும் மாடுகளைப் பிடித்துச் செல்வதும் மாடுகளைப் பழிவாங்கும்விதமாக போக்குவரத்திற்கு இடைஞ்சலாக உள்ளது எனக் கூறி நான்காயிரத்து 300 ரூபாய் அபராதமும் வசூலிக்கின்றனர்.
புதுச்சேரி நகராட்சி இவ்வாறு வசூலிப்பது மாடுகள் வளர்ப்போரை அழிக்கும் செயலாகும். எனவே, மாட்டிற்கு அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும். மேய்ச்சலுக்கு நகரத்து வழியாக செல்லும் மாடுகளைப் பிடிப்பதைத் தடைசெய்ய வேண்டும்.
மேலும், புதுச்சேரியில் உள்ள மாடுகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு கொண்டுவந்து ஒப்படைக்கும் போராட்டம் வருகின்ற 27ஆம் தேதி நடத்தவுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : பால் வேனிலிருந்த 80 ஆயிரம் ரூபாய் திருட்டு