இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க மாநிலத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஈரோடு மாவட்ட ஆவின் ஒன்றியத்திலிருந்து காங்கேயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட கலப்புத் தீவனங்கள், பூஞ்சை பிடித்துப் போயிருப்பதும், அதை அப்படியே பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கியிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
ஏனெனில் 'அப்லாடாக்சின் எம்-1' என்ற நச்சுத்தன்மை கலந்த பால் தமிழ்நாட்டில்தான் அதிகளவில் விற்பனையாகிறது என்றும், அப்லாடாக்சின் எம்-1 நச்சுத்தன்மை கலந்த பாலை குடிப்பதால் புற்றுநோய் வரும் என்கிற அதிர்ச்சித் தகவலை மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் 'அப்லாடாக்சின் எம்-1' என்கிற நச்சுத்தன்மையானது, பூஞ்சை பிடித்த தீவனங்களை உண்ணும் கால்நடைகளிலிருந்து கறக்கப்படும் பாலில்தான் உருவாகிறது.
இந்நிலையில் பூஞ்சை பிடித்த கலப்புத் தீவனங்களைக் குப்பையில் கொட்டி அழிக்காமல் அப்படியே கூட்டுறவுச் சங்கங்களுக்கு விநியோகம் செய்து, அதனைப் பால் உற்பத்தியாளர்களுக்கு விற்பனைசெய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
தரமற்ற கலப்புத் தீவனங்களால் கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்படும், அதன்மூலம் தரமற்ற பால் உற்பத்தியாகும் என்பதைத் தெரிந்தே செயல்பட்ட ஈரோடு மாவட்ட ஆவின் ஒன்றியம், காங்கேயம் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தரமான மாட்டுத் தீவனங்களைப் பெற்று தரமான பால் உற்பத்தி நடைபெறுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்“ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கானக உயிர்களை காண ஒரு பயணம்....வன உயிர் புகைப்படக்காரர் செந்தில் குமரன் ஷேரிங்ஸ்