கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் கடும் சிரமங்களை சந்தித்துவருகின்றனர். ஏற்கனவே வேலையிழந்து வருமானமின்றித் தவிக்கும் அவர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கும் செல்ல முடியாமல், அனுதினமும் வேதனைகளை சுமக்கின்றனர்.
போக்குவரத்து முடக்கத்தால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலர், நடந்தே அவர்களின் மாநிலங்களுக்குச் செல்லும் துயரங்களும், தினந்தோறும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட சஞ்சய் நாட் என்பவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சாலைகளில், தெருக்கூத்து நடத்தி தன்னுடைய குடும்பத்தை நடத்திவந்தார். ஆனால், ஊரடங்கால் இவரின் தொழில் முற்றிலும் முடங்கி வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.
தனது சொந்த கிராமத்திற்கு செல்ல முடியாமல் அவரின் மனைவி, நான்கு குழந்தைகளை வைத்துக்கொண்டு, ஒரு வேளை சோற்றுக்கே அல்லல்படும் நிலையில் இருந்துள்ளார். இவர் இருந்த வீட்டின் உரிமையாளரும், இவர்கள் படும் வேதனையைப் புரிந்துகொள்ளாமல், வீட்டை காலி செய்ய வற்புறுத்தியுள்ளார்.
இதனால் மனம் வாடிய சஞ்சய் நாட், அவர் மனைவியின் தங்க மோதிரத்தை ஆறாயிரம் ரூபாய்க்கு விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தில் மாட்டு வண்டி ஒன்றை வாங்கினார். அதில், தனது நான்கு குழந்தைகளையும், அவர் மனைவியையும் ஏற்றிக்கொண்டு ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அவரின் கிராமத்திற்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ராஜஸ்தானிலிருந்து பயணத்தை மேற்கொண்டார். தற்போது வரை 500 கி.மீ. தூரத்தை இவர் மாட்டு வண்டி பயணத்தின் வாயிலாகவே கடந்துள்ளார்.
இது குறித்து சஞ்சய் நாட் ஈடிவி பாரத் செய்தியாளரிடம் கூறுகையில், ”ஊரடங்கால் இங்கு பிழைக்க வழியில்லாததால், எங்கள் கிராமத்திற்குச் செல்கிறோம். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து வேலையிழந்து வருமானம் இல்லாமல் தவிக்கிறோம்” என்றார் வேதனையாக.
இதையும் படிங்க:தொழிலாளர்களின் இன்னல்கள் மத்திய அரசிற்கு சென்றடைய செய்வோம் - ராகுல் காந்தி