கரோனா பாதிப்பால் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில், அனைவரது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளிகள் என்று தான் சொல்ல வேண்டும்.
தனது சொந்த மாநிலத்தை விட்டு வெளிமாநிலத்தில் வேலைக்கு சென்ற அனைவரும் இந்த லாக்டவுனால் வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதில் பல பேர் நடைப்பயணமாகவே கிட்டத்தட்ட ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணித்து சொந்த ஊருக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் பீகாரை சேர்ந்த ராம் புகார் என்பவர் தனது எட்டு மாத மகன் இறந்து விட்டான் என தொலைபேசி மூலம் அறிந்துள்ளார். எப்படியாவது தனது சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என நினைத்து நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
இருப்பினும் அவரை டெல்லி-உ.பி. எல்லையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். வேறு வழியில்லாமல், அவர் தனது குடும்ப உறுப்பினருடன் தொலைபேசியில் பேசி தன்னால் சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை என கவலை தெரிவித்துள்ளார்.
சரியான உணவின்றி மூன்று நாள்களாக ஒரு பாலத்தின் கீழ் வசித்து வந்துள்ளார். மிகவும் உடைந்து போன அவர் கதறி அழும்போது அவரை பார்த்த ஒரு காவல் அலுவலர் என்ன நடந்தது என கேட்டு தெரிந்துள்ளார்.
பின்பு அந்த காவல் அலுவலர் அவரை தன்னுடன் அழைத்து சென்று உணவு வழங்கி அவரின் சொந்த ஊருக்கு திரும்ப ஏற்பாடு செய்து அவரை பத்திரமாக அவரின் ஊருக்கு அனுப்பிவைத்துள்ளார்.
இதையும் படிங்க: கைவிட்ட அரசு; நடை பயணமாய் புறப்பட்ட குடிபெயர் தொழிலாளர்கள் - நேரில் சந்தித்த ராகுல்