கரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சொந்த ஊர் திரும்ப முடியாலும், வாழ்வாதாரம் இழந்தும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் திண்டாடி வருகின்றனர்.
அரசின் மீதான நம்பிக்கை இழந்து நிற்கும் ஏராளமானோர் பொடி நடையாகவே சொந்த ஊருக்குச் செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன.
இந்நிலையில், காவல் துறையினரின் கண்ணில் படாமல் ஊருக்குச் செல்லும் நோக்கில் வெளிமாநில தொழிலாளர்கள் பலர், தங்கள் உயிரைப் பணயம் வைத்து சாக்கடை வழியாகப் பிரயாணம் மேற்கொள்ளும் காணொலி ஒன்று வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவில் எடுக்கப்பட்ட இந்த காணொலியில், ஏராளமானோர் சாக்கடையிலிருந்து வெளியேறி வருவது போலவும், எதிர்த்திசையில் உள்ள இன்னொரு சாக்கடைக்குள் நுழைவது போலவும் காட்சி அமைந்துள்ளது.
இருட்டு, விஷ வாயு, பாம்புகள், கிருமிகள் போன்ற சாக்கடைக்கே உரிய அபாயங்களைப் பொருட்படுத்தாமல் இவர்கள் மேற்கொள்ளும் இந்தப் பயணம் நாட்டில் வெளிமாநில தொழிலாளர்களின் அவலத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி