புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், பாகிஸ்தானில் அமைந்துள்ள சீக்கிய வழிப்பாட்டு தலத்துக்கு இந்தியாவிலிருந்து சிறப்பு வழித்தடம் அமைப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, பாகிஸ்தான் கர்தார்பூரில் உள்ள சீக்கிய வழிபாட்டுத்தலத்துக்கு இந்தியாவிலிருந்து யாத்ரீகர்கள் செல்வதற்கு, கர்தார்பூர் வழித்தடம் அமைக்கப்படுவதற்கான நடைமுறைக்கூறுகள் குறித்தும், இதுதொடர்பான ஒப்பந்த வரைவு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதற்கிடையே, கர்தார்பூர் வழித்தடம் வழியாக இந்தியர்கள் பாகிஸ்தான் செல்வதற்கு விசா இல்லாமல் அனுமதியளிக்கவேண்டும் என மத்திய உள்துறை செயலக இணைச்செயலர் எஸ்.சி.எல்.தாஸ் வலியுறுத்தினாா். மேலும் இதுதொடர்பாக கூடுதல் ஆவணங்களையும், நடைமுறைகளிலும் எந்த வித குழப்பமும் இல்லை எனத் தெரிவித்தார்.