2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற இளம்பெண் கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட ஐந்து பேரில் ஒருவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மீதமுள்ள நால்வரில் வினய் சர்மா என்பவர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார்.
இந்நிலையில், குற்றவாளியின் கருணை மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய உள் துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்னர்தான் டெல்லி ஆளுநர் அனில் பைஜால் இந்தக் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று உள் துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்திருந்தார். அதேபோல டெல்லி அரசும் இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.
வினய் சர்மாவின் கருணை மனு நிராகரிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை குடியரசுத் தலைவரின் இறுதி முடிவுக்கு உள் துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. நிர்பயாவின் பெற்றோரும் இந்தக் கருணை மனு நிராகரிக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தேசமே ஹைதராபாத்தில் பெண் மருத்துவருக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கொதித்தெழுந்துள்ள இச்சூழலில் உள் துறை அமைச்சகம் இந்தப் பரிந்துரை மேற்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: தெலங்கானா மக்கள் கொண்டாடும் ரியல் சிங்கம்!