கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாட்டில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொதுப்போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டது. இதன் காரணமாக, நாட்டில் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.
பின்னர் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்களை தாயகம் அழைத்துவருவதற்காகவும், மருந்துப் பொருள்கள், பரிசோதனை செய்யவேண்டிய மாதிரிகளை எடுத்துச் செல்வதற்காகவும் ஒரு சில விமானங்கள் இயக்கப்பட்டன.
இருந்தபோதிலும், பயணிகள் விமானங்கள் இயக்கப்படுவதற்கு இம்மாதம் 25ஆம் தேதிவரை தடை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதையடுத்து, உள் துறைச் செயலர் அஜய் பல்லா விமான சேவைகள் தொடங்குவது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நடப்பு ஊரடங்கில் அமல்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில் சில திருத்தங்களைச் செய்துள்ளோம். அதன்படி, நாட்டில் தடைசெய்யப்பட்டிருந்த உள்நாட்டுப் பயணிகள் விமான சேவையினை நீக்கியுள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, விமான சேவை தொடங்குவது குறித்து பேசிய மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்திப்சிங் புரி, "இம்மாதம் 25ஆம் தேதிமுதல் நாட்டில் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை தொடங்கப்படும்.
இதற்காக அனைத்து விமான நிறுவனங்கள், விமான சேவை நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். விமான நிறுவனங்கள், ஊழியர்களுக்கான புதிய விதிமுறைகளும் விமானப் போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் மீண்டும் தொடங்குகிறது விமான சேவை