கரோனா ஊரடங்கினால் இந்தியாவுக்குள் அதிகமான இடப்பெயர்வுகள் நடைபெற்றன. குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலையில்லாமல் பசி, பட்டினியோடு தங்களது சொந்த ஊருக்கு நடந்து சென்றனர். மனித வரலாற்றிலே நடந்த இடப்பெயர்வுகளில் சமீபகாலமாக நடந்த இடப்பெயர்வுகள்தான் மிகப்பெரியது என வரலாற்று ஆய்வாளர்களும் கூறிவருகின்றனர்.
இதனையடுத்து, "தற்போது பாஜகவா அல்லது காங்கிரஸா என்று சண்டைபோடும் நேரமல்ல. மக்களுக்கு உதவவேண்டிய நேரம். அதிகாரத்திலுள்ள மத்திய அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். வருமானம் இல்லாமல் இருக்கும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்கி அவர்களை பசி,பட்டினியிலிருந்து காக்கவேண்டும்" என சோனியகாந்தி கூறியிருந்தார்.
இந்நிலையில், "மக்கள் நலன்களை கருத்தில் கொண்டும் பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிக்க உருவாக்கப்பட்டத் திட்டம் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்பதை இந்த கரோனா பெருந்தொற்றுகாலம் நிரூபித்துள்ளது. ஆனால், இத்திட்டத்திற்கு கூடுதலாக 40கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கவில்லை. கடந்த 2014ஆம் ஆண்டு இந்தத் திட்டம் மோசமானத் திட்டமென்று பலவாறாக மோடியால் விமர்சிக்கப்பட்டது. கடந்த மே மாதம் மட்டும் 2.19 கோடி மக்கள் இத்திட்டத்தின் கீழ் வேலை கோரியுள்ளனர். கடந்த எட்டு ஆண்டுகளில் இது அதிகம்" என காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.