உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ரயில்வே காலனியில் மூத்த ரயில்வே அலுவலரின் மனைவி மற்றும் மகன் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
இதில் உயிரிழந்தவர்கள் ரயில்வே துறையில் மக்கள் தொடர்பு அலுவலராக இருக்கும் ராஜேஷ் தத் பாஜ்பாய் என்பவரின் மனைவி மால்டி (50), அவரது மகன் சர்வதுத் (22) என்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து லக்னோ காவல் துறை ஆணையர் சுஜித் பாண்டே கூறுகையில், "இருவரும் அவர்களின் வீட்டிலேயே துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே அலுவலரின் மகள், வீட்டில் வேலை செய்யும் நபருக்கு தகவல் அளித்துள்ளார். அந்த பணியாளர் அளித்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.
ரயில்வே அலுவலரின் மகள்தான் தனது தாயையும் சகோதரனையும் சுட்டுக் கொன்றார். குற்றத்தை தற்போது அவரும் ஒப்புக்கொண்டார்.
அந்தப் பெண் ஏற்கனவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கைகளில் பிளேடுகள் மூலம் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் நிறைய உள்ளன. அவரை உளவியல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
அந்தச் சிறுமி தனது தாய் மற்றும் சகோதரனை நோக்கி துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பு கண்ணாடியின் மீது முதலில் சுட்டுள்ளார் என்றும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மூதாட்டியின் நகையை லாக்கரில் வைப்பதாகக் கூறி மோசடி செய்த தம்பதி கைது!