இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், அந்நாட்டு முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப்பும் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக, மன அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில் நடத்தப்படும் வகுப்பில், மெலனியா ட்ரம்ப் பங்கேற்கவுள்ளார்.
இதையடுத்து, மாணவர்களுடன் அவர் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். இதற்காக, பாதுகாப்புப் படைகளின் உத்தரவின் பேரில் பள்ளிக்குச் செல்லும் பாதையிலிருக்கும் மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மெலனியா தெற்கு டெல்லிக்கு இன்று நண்பகல் செல்லவுள்ளார். இதில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அம்மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது.
பின்னர், விருந்தினர் பட்டியலிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா ஆகியோரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், பாஜக இதில் அரசியல் செய்துவிட்டதாக ஆம் ஆத்மி சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
கெஜ்ரிவால் பங்கேற்பதில் ஆட்சேபனை இல்லை என்றபோதிலும்; மெலனியா பங்கேற்கும் நிகழ்ச்சி அரசியல் நிகழ்வு அல்ல என அமெரிக்கத் தூதரகம் விளக்கம் அளித்தது.
இதையும் படிங்க: ட்ரம்ப் வருகைக்கு எதிர்ப்பு: கருப்புக் கொடி ஏந்தி சிபிஐ போராட்டம்