அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரு நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். ட்ரம்ப் உடன் அவர் மனைவி மெலனியா ட்ரம்ப், அவரின் மகள் இவாங்கா ஆகியோரும் வருகை தந்துள்ளனர். பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, டெல்லிக்குச் சென்ற ட்ரம்ப், மெலனியா ஆகியோர் காலையில் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.
இதனிடையே, மெலனியா ட்ரம்ப் டெல்லியிலுள்ள சர்வதோயா உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார். மெலனியாவின் வருகைக்காக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்துக் கலை நிகழ்ச்சிகளையும் மெலனியா கண்டுகளித்தார். நிகழ்ச்சியில் மாணவி ஒருவர் மெலனியாவுக்கு முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.
பின்னர் மாணவர்கள் மத்தியில் நமஸ்தே என்று கூறி தனது உரையைத் தொடங்கிய மெலனியா, இந்தியாவிற்கு தான் வருவது இதுவே முதல்முறை என்றும் மாணவிகள் பாரம்பரிய முறைப்படி நடனமாடி தன்னை வரவேற்றது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் கூறினார். இந்தியர்கள் மிகவும் கனிவோடும் அன்போடும் வரவேற்று உபசரிப்பதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: 'ட்ரம்ப்புக்கு சபர்மதி ஆசிரமம் விசிட் பிடிக்கவில்லை போல' - காந்தியின் கொள்ளுப்பேரன்