ஜம்மு- காஷ்மீரின் பரிம்போரா பகுதியில் கடந்தாண்டு டிச.30 மாதம் பாதுகாப்புப் படையினர் மூவரை சுட்டுக்கொன்றனர். பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் தகவல் வெளியிட்டிருந்தது.
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ராணுவம் பயங்கரவாதிகளைச் சுட்டுக்கொல்லவில்லை என்றும், அவர்கள் மூவரும் அப்பாவிகள் என்றும் ஜம்மு-காஷ்மீர் மனித உரிமைகள் ஆர்வலர்கள் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளனர்.
ராணுவத்தின் இந்தப் போலி என்கவுன்டர் நடவடிக்கைக்கு எதிராகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், போலி என்கவுன்டர் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொண்டு அதனை நடத்திய ராணுவ வீரர்களைத் தண்டிக்க வேண்டுமென்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான மெஹபூபா முப்தி கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவுக்கு மெஹபூபா முப்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “டிசம்பர் 30 அன்று பரிம்போராவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
அவர்கள் மூவரும் வெறும் 17 வயதினர் என அவர்களது குடும்பத்தினர் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாது, அம்மூவருக்குப் பிரிவினைவாத அமைப்புகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.
பரிம்போரா என்கவுன்டர் நடவடிக்கை தொடர்பில் காவல் துறை, ராணுவம் ஆகியவை வெளியிட்ட இரண்டு அறிக்கைகளும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளன.
அவை பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. இந்தப் போலி என்கவுன்டர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும். எனவே இது தொடர்பாக ஒரு பக்கச்சார்பற்ற விசாரணையைத் தொடங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவாகச் செயல்பட்டால் மட்டுமே நீதி வழங்க முடியும்.
பெரும்பாலான அரசியல் விஷயங்களில் ஒரே பக்கத்தில் நிற்பதுபோல இந்த விஷயத்திலும் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஒருபக்கச் சார்பு எடுக்கக் கூடாது. மனித உரிமைகளை மீறும் ஆயுதப்படைகளின் இத்தகைய செயல்களைக் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
ஸ்ரீநகரில் கொல்லப்பட்ட மூவரின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க யூனியன் பிரதேச நிர்வாகம் மறுத்துள்ளது. நிர்வாகத்தின் இந்த முடிவு அவர்களது குடும்பத்தினரை மேலும் வேதனைக்குள்ளாக்கும். மனிதாபிமானமற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமான இந்த முடிவை நீங்கள் மறுபரிசீலனை செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
தனது அன்பு மகனின் மரணத்தால் சூனியநிலைக்குத் தள்ளப்பட்ட தாய், உயிரிழந்தவரின் முகத்தைப் பார்க்கும் கடைசி வாய்ப்பைப் பறிக்கக்கூடாது. குடும்பங்களின் விருப்பப்படி இறுதிச் சடங்குகளைச் செய்ய மகனின் இறந்த உடலுக்காகப் பிச்சை எடுக்க வைக்கக் கூடாது. எனவே, இதில் தலையிட்டு, சுட்டுக்கொல்லப்பட்ட மூவரின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதை உறுதிசெய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
கடந்தாண்டு ஜூலை மாதம் சோபியான் மாவட்டத்தை அடுத்த அம்ஷிபோராவில் நடந்த போலி என்கவுன்டரில் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தனித்துவமான புத்தகம்