நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கரோனாவின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால், தலைநகர் டெல்லயில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மூன்றாவது கரோனா அலையாக இருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளார். இந்தக் கூட்டத்தில், துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின், மத்திய அரசின் மூத்த அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். கரோனாவை எப்படி எதிர்கொள்வது குறித்து அதில் ஆலோசிக்கப்படவுள்ளது.
முன்னதாக, நவம்பர் 2ஆம் தேதி, டெல்லியில் நிலவும் கரோனா சூழ்நிலை குறித்து ஆலோசிக்க மத்திய உள்துறைச் செயலர் அஜய்குமார் பல்லா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவிழா காலமென்பதால் மக்களின் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு வழிமுறைகளை எப்படியெல்லாம் கடைபிடிக்கலாம் என்பது குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டது.
இதற்கிடையே, காற்று மாசு அதிகரிப்பதன் விளைவாகவே கரோனாவின் தாக்கம் அதிகரிப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியிருந்தார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில், சோதனையை அதிகப்படுத்தி சிகிச்சையை தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.