வரும் 9ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் காலியாக உள்ள 10 நாடாளுமன்ற மாநிலங்களவை இடங்களுக்குத் தேர்தல் நடக்கிறது.
இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஏழு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை நேரில் சந்தித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதனையடுத்து, எம்.எல்.ஏ.க்கள் ஏழு பேரையும் பி.எஸ்.பி. மேலிடம் இடைநீக்கம் செய்தது. இடைநீக்கம் செய்யப்பட்ட அந்த ஏழு பேரும் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுப்பெற்ற சுயேச்சை வேட்பாளர்களை ஆதரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது பற்றி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறுகையில், “நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சியின் இரண்டு வேட்பாளர்களைத் தோற்கடிக்கக்கூடிய எந்தக் கட்சி வேட்பாளருக்கும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள்.
மேலும், வருங்காலத்தில் நடக்கும் சட்டமேலவை, மாநிலங்களவை உள்பட எந்தத் தேர்தலாக இருந்தாலும், சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை வீழ்த்த பாஜக உள்பட எந்தக் கட்சிக்கும் வாக்களிப்போம்.
எஸ்.பி.யின் 'தலித் விரோத' நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் உத்தரப்பிரதேச எம்.எல்.சி. தேர்தலில் சமாஜ்வாதி கட்சியை (எஸ்.பி.) தோற்கடிக்க பாஜக உள்பட வேறு எந்தக் கட்சிகளுக்கும் பகுஜன் சமாஜ் ஆதரவு வழங்கும் என நான் கூறியதை காங்கிரசும் எஸ்.பி.யும் தங்கள் சொந்த அரசியல் நலனுக்காகத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
இஸ்லாமியர்களை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தளத்திலிருந்து விலகச் செய்ய, குறிப்பாக ஏழு இடங்களில் இடைத்தேர்தலில் இஸ்லாமியர்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிக்காமல் இருப்பதை உறுதிசெய்வதற்கும் இந்த அவதூறைக் கூறுகின்றனர்.
இதன் பொருள் எஸ்.பி. வேட்பாளரைத் தோற்கடிக்க நாங்கள் வேறெந்த கட்சியைச் சேர்ந்த வேட்பாளராக இருந்தாலும் ஆதரிப்போம் என்பதேயாகும்.
பாஜகவுக்கு வாக்களிக்குமாறு எனது கட்சி எங்கும், யாரிடமும் முறையீடு செய்யவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி தெளிவுபடுத்த விரும்புகிறது.
பகுஜன் சமாஜ் கட்சி தங்கள் கட்சியை ஆதரிப்பதாகக் கூறி பாஜகவினர் மக்களிடையே பரப்புரை செய்ய முயற்சிக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. மத்தியப் பிரதேச தேர்தல்கள் அல்லது பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்கள் என எதுவாக இருந்தாலும், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுப்பெற்றவர்களை ஆதரிக்கும்.
நான் ஒருபோதும் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு முறையிடவில்லை.
பகுஜன் சமாஜ் கட்சி-பாஜக கூட்டணி ஆட்சியின்போது உத்தரப் பிரதேசத்தில் எந்தக் கலவரமும் நடக்கவில்லை. பாஜகவுடன் அரசு அமைத்த பிறகும், பகுஜன் சமாஜ் கட்சி இந்து-இஸ்லாமியர் கலவரம் நடக்க அனுமதிக்கவில்லை.
ஆனால், காங்கிரஸ்-எஸ்.பி. கூட்டணி ஆட்சியின்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது" எனக் கூறினார்.