உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரு துருவங்களாக விளங்கிய மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆகியவை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
இரண்டு கட்சித் தலைவர்களும் எடுத்த இந்த திடீர் முடிவு பாஜகவை வீழ்த்தும் என கூறப்பட்ட நிலையில் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தன.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் பகுஜன் சமாஜ் 10 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன. அவர்களின் மகாகத்பந்தன் என்ற கூட்டணி மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறியதோடு இரு கட்சிகளின் வாக்கு விழுக்காடும் 2014 மக்களவைத் தேர்தலில் பெற்ற விழுக்காட்டை விட குறைந்தது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ததால், தற்போது அம்மாநிலத்தில் காலியாக உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் நேற்று டெல்லியில் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய மாயாவதி கூட்டணிக் கட்சியைச் சார்ந்து இருக்கக் கூடாது என்று கட்சி நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து இன்று காலை மாயாவதி, அரசியல் காரணங்களுக்காக சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணியை தற்காலிமாக முறித்துக் கொள்வதாக அறிவித்தார். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி அரசியலில் வெற்றிப்பாதைக்கு திரும்பினால் அவருடன் மீண்டும் கூட்டணி அமைக்கப்படும். எனவே வரும் இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார்.
இது குறித்து அகிலேஷ் யாதவ், மாயாவதியுடனான கூட்டணி முறிந்ததால் அதற்கேற்றார்போல் நானும் செயல்படுவேன். அதுதவிர இடைத்தேர்தலில் 11 தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சியும் தனித்து போட்டியிடும் என்று தெரிவித்தார். அகிலேஷ் - மாயாவதியின் கூட்டணி முறிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.