உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்பை நினைவுகூறும் வகையிலும், தொழிலாளர் வரலாற்றின் நெடும் போராட்டங்களை நினைவுகூறும் வகையிலும் மே 1 ஆம் தேதி, சர்வதேசத் தொழிலாளர்கள் தினமாகவும், மே தினமாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த வருடம் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தொழிலாளர்கள் கொண்டாடப்படுவதற்கு பதிலாக, வேலை இழந்தும், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பெரும் இன்னல்களை சந்தித்தும் வருகின்றனர்.
தொழிற்சாலைகள், உணவகங்கள், கடைகள், கட்டுமானக் கூடங்கள் என அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டு, எந்தவித பொருள் ஆதாரமும் இன்றி, பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வருமானமின்றி நிர்கதியாய் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எந்தவித அரசு போக்குவரத்து வசதிகளும் இன்றி, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நகரங்களில் இருந்து உறைவிடமின்றி, பசி பட்டினியோடுதங்கள் சொந்த கிராமங்களுக்கு, நடந்தே பயணித்துக் கொண்டிருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
”கரோனா மறைக்கப்பட்ட விஷயங்களை திடீரென ஒளிரச் செய்யும் ஒரு வேதியியல் பரிசோதனை போல வேலை செய்துள்ளது. மேல்தட்டு, நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் காலனிகளுக்குள் தங்களைப் பூட்டிக் கொண்டதால். நமது நகரங்களும், பெரு நகரங்களும், தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த குடிமக்களை தேவையற்ற சம்பாத்தியங்களைப் போல வெளியேற்றத் தொடங்கி விட்டன” என எழுத்தாளர் அருந்ததி ராய் ஃபினான்ஷியல் டைம்ஸிற்கான தன் கட்டுரை ஒன்றில் கூறியவாறு தான், இந்த ஊரடங்கு அமைந்துள்ளது.
தொழிலாளர்கள், விநியோக சங்கிலி, ஊரடங்கு:
- ஊரடங்கும் அதன் விளைவாக நேர்ந்துள்ள தொழிலாளர் இடம்பெயர்வும், சந்தைகள், தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்கள், சேமிப்புப் கிடங்குகள், போக்குவரத்து மற்றும் விநியோகம் ஆகியவற்றில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளது. இதனால் விநியோகச் சங்கிலி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
- நடப்பில் தேவையான தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 20 சதவிகிதம் தொழிலாளர்களை ஒன்று கூட்டவே வணிக அமைப்புகள் சிரமப்படுகின்றன. மேலும் தொழிற்சாலைகள் குறைவான திறனையும் உழைப்பையும் கொண்டு செயல்படுகின்றன. இதனால் உற்பத்தியின் அளவு வழக்கத்தைக் காட்டிலும் குறைந்துள்ளது.
- தொழிற்சாலைகள், சேமிப்புக் கிடங்குகள், போக்குவரத்து, அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் ஆகியவற்றை செயல்படுத்தத் தேவையான தொழிலாளர்களைக் கண்டுபிடிக்க உதவுமாறு டில்லி அரசு தொழிற்சங்கங்களிடம் சமீபத்தில் கேட்டுக் கொண்டதில் இருந்து, நிலைமையின் தீவிரத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.
ஊரடங்கும் விவசாயமும் :
- பிற மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளதாலும், ஏறக்குறைய 10 லட்சம் தொழிலாளர்களின் வேலைகளில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட காரணங்களாலும், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் உள்ள விவசாயிகள், நெற்பயிர்களுக்கு பதிலாக பருத்தியைத் தேர்வு செய்து விளைவிக்க முடிவு செய்துள்ளதாக பிரபல நாளேட்டின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நெல் விளைவிப்பதற்கு அதிக உழைப்பு தேவை. இந்த ஊரடங்கு, குறைவான ஊதியங்களுக்கு உழைத்துவந்த பெரும்பாண்மையான தொழிலாளர்களை தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் நிலைக்கு தள்ளியுள்ளது.
- 2011ஆம் ஆண்டின், மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்ட, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மதிப்பீட்டின்படி, இந்தியா முழுவதும் சுமார் 24 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
புலம்பெயர் தொழிலாளர்கள், சந்தைகளின் போக்குகளை மீட்டமைத்தல் :
- கரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கான இந்த ஊரடங்கானது, இந்தியாவின் தொழிலாளர்களுக்கான சந்தை, அவர்களின் வெளி மாநிலங்கள் சென்று உழைக்கும் போக்கு இவற்றை மீட்டமைக்கும் எனக் கூறப்படுகிறது.
- மக்களின் பழக்கவழக்கங்களில் ஏற்படப்போகும் மாற்றங்களை, வல்லுநர்கள் கணித்ததன்படி, ஊரடங்கு முற்றிலுமாய் நீக்கப்பட்டதும், பெரும்பாலான தொழிலாளர்கள் குறைவான ஊதியத்திலேயே, தங்கள் சொந்த ஊர்களுக்கு அருகிலுள்ள, பாதுகாப்பான இடங்களை தேர்வு செய்து வேலை செய்யத் தொடங்குவர்.
- மேலும், மலிவான கூலிக்கு உழைப்பைக் கொட்டி வந்த பெரும்பான்மைத் தொழிலாளர்கள் சொந்த ஊர்கள் திரும்புவதால், சந்தைகளில் வரலாறு காணாத விலை உயர்வும், அதிகக் கூலியில், உள்ளூரைச் சேர்ந்த தொழிலாளர்களை பணியமர்த்த வேண்டிய நிலையும் ஏற்படும்.
ஊரடங்கிற்கு முன்:
- ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பே, நாட்டில் வேலையின்மை தலை விரித்தாடியது. ஆனால் விமர்சகர்கள் குறிப்பிடுவது போல, திட்டமிடப்படாமல் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ஏற்கனவே நிலையற்று இருந்த தொழிலாளர் சந்தை மேலும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
- சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகானமி (Centre for Monitoring Indian Economy)இன் கூற்றுப்படி, ஏப்ரல் 26 ஆம் தேதி வரையிலான தொழிலாளர் பங்களிப்பு 35.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது மார்ச் 22 ஆம் தேதி அதாவது ஊரடங்கிற்கு இரண்டு நாள்கள் முந்தைய கணக்கின்படி 42.6 சதவிகிதமாக இருந்தது. இந்த ஊரடங்கில் மட்டும் 72 மில்லியன் மக்கள் தொழிலாளர் சந்தைகளில் இருந்து வெளியேறியுள்ளதைக் காட்டுகிறது.
- இது மட்டுமல்லாமல், ஊரடங்கின் மத்தியில், தொழில்கள் முடங்கிப்போய் உள்ள சமயத்தில், 85 மில்லியன் மக்கள் தீவிரமாக வேறு வேலைகளைத் தேடும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் தொழிலாளர்களின் நிலை:
- தொழிலாளர் பணியக தரவுகளின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவிலுள்ள 46.5 கோடி தொழிலாளர்களில் 12 கோடி பேர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், 25 சதவிகிதத்தினர் கிராமப்புற குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், 12 சதவிகிதத்தினர் தற்காலிகப் பணிகளை தங்களது முக்கிய வருமான ஆதாரமாக நம்பியுள்ள நகர்ப்புற குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
- நகர்ப்புறங்களில் உள்ளவர்களில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமானோர், பணி நிரந்தரம், வேலை பாதுகாப்புகள் அற்ற, வழக்கமான மாத சம்பள வேலைகளிலேயே உள்ளனர்,
- வேளாண் அல்லாத துறைகளைச் சேர்ந்த, சம்பளம் பெறும் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு ஆயுள் பாதுகாப்பு உள்ளிட்ட எந்த சமூகப் பாதுகாப்பு சலுகைகளும் இல்லை.
- நேஷனல் சேம்பிள் சர்வே ஆர்கனைசேஷன் (National Sample Survey Organisation) இன் கணக்கெடுப்பின்படி, நாட்டில் 71 சதவிகிதத் தொழிலாளர்களுக்கு வேலை ஒப்பந்தங்கள் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்படவில்லை. 54 சதவிகிதத்தினர் ஊதிய விடுப்பு பெறுவதில்லை. கிராமப்புறங்களில் 57 சதவிகிதத்துக்கு அதிகமானவர்களும் நகர்ப்புறங்களில் 80 சதவிகிதத்தினருக்கு மேற்பட்டவர்களும் நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேர வேலை நேரத்தைத் தாண்டியும், வாரத்திற்கு 48 மணி நேரமும் உழைத்து வருகின்றனர்.
- 52 சதவிகிதத்தினருக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உண்மையில் ‘சுயதொழில் செய்பவர்கள்’ என்பதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. உழைக்கும் மக்களில் கால் பகுதியினர் தினசரி வேலையின் அடிப்படையில் வருவாய் ஈட்டும் சாதாரண தொழிலாளர்கள், 23 சதவிகிதத்தினர் (கிட்டத்தட்ட கால் பகுதியினர்) வழக்கமான ஊதியம் அல்லது மாதச் சம்பளம் பெறும் ஊழியர்களும் ஆவர்.